சேலத்தில் எலுமிச்சை பழம் விலை உயர்வு

சேலம் மார்கெட்டில் எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-03-01 10:48 GMT

எலுமிச்சை விலை உயர்வு

தமிழகத்தில் சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. அதனால் விலை சரிந்து ஒரு எலுமிச்சை பழம் ரூ.2 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எலுமிச்சை பழத்தின் தேவை கூடியுள்ளது.

சேலம் மார்க்கெட்டிற்கு எலுமிச்சை பழத்தின் வரத்து 20 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது. ஒரு பழம் ரூ.2 முதல் 4-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், அது தற்போது ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் எலுமிச்சை பழங்களை பொதுமக்கள் அதிகளவில் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த எலுமிச்சை பழ வியாபாரிகள் கூறியதாவது:- சேலம் மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 டன் எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது.

இங்கு விற்கப்படும் எலுமிச்சை பழத்தை சில்லரை வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். ஆனால் தற்போது நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்கும் என்பதால் எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News