முத்துராமலிங்க தேவர் வடிவில் பிரதமர் மோடி - அண்ணாமலை

முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று சொன்னாரோ அதே பார்வையில் பயணிக்கக்கூடியவர் மோடி. சனாதனத்தைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் முத்துராமலிங்கத் தேவர் எப்படி வெகுண்டெழுந்து நிற்பாரோ அதேபோல சனாதன தர்மத்தைக் காக்கக் கூடியவராக நமது பிரதமர் மோடி இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2024-02-27 06:12 GMT

அண்ணாமலை 

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநாட்டில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார் எனக் கூறியுள்ளார்.

என் மண், என் மக்கள்' யாத்திரையை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நாளை நிறைவு பெறுகிறது. இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதியில் நேற்று நடைபயணத்தில் பங்கேற்றார் அண்ணாமலை. அதைத்தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, "இந்திய அளவில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேவைப்படுகிறார். இந்த மண்ணில் ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், அடாவடித்தனமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நான்கையும் அழிக்க நமக்கு தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா என்ற மருந்து மீண்டும் தேவைப்படுகிறது. முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் மோடி: முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று சொன்னாரோ அதே பார்வையில் பயணிக்கக்கூடியவர் மோடி. சனாதனத்தைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் முத்துராமலிங்கத் தேவர் எப்படி வெகுண்டெழுந்து நிற்பாரோ அதேபோல சனாதன தர்மத்தைக் காக்கக் கூடியவராக நமது பிரதமர் மோடி இருக்கிறார்.

நேர்மையான அரசியலை செய்ய முடியும் என நிரூபித்த முத்துராமலிங்கத் தேவர் போல பத்து ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி புரிந்து வருகிறார். இருவரின் வாழ்க்கை குறிப்புகளையும் படித்தால், இருவருமே அச்சு அசலாக ஒரே பாதையில் பயணிக்கக் கூடியவர்கள் என்பது தெரியவரும். புதிய அரசியல் மாற்றம்: திமுகவினர் முத்துராமலிங்கத் தேவரை தவறாகப் பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கால் நகத்தின் தூசிக்கு கூட திமுகவினர் ஈடாக மாட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் தெய்வத்திருமகனார் தேவர் ஐயா சிலை, நமது முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் ஆட்சியில், அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் 2002 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. நமது பாரதப் பிரதமர் மோடியும், முத்துராமலிங்கத் தேவர் ஐயா மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு முதல் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் ஒரு திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட வெற்றி பெற மாட்டார்கள். டெல்லியில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போதை பொருளை கடத்தி கைதாகி உள்ளனர். திமுக விசிக ஆகிய கட்சிகளை கொள்கை கூட்டணி என்பதை விட கடத்தல் கூட்டணி என சொல்லலாம். 450 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவில் பிரதமராக மீண்டும் மோடி வருவார். முத்துராமலிங்க தேவரின் வடிவில் இருக்கக்கூடிய பிரதமர் மோடியை தமிழக மக்கள் மீண்டும் பிரதமராக்க வேண்டும்" என அண்ணாமலை பேசியுள்ளார்.

Tags:    

Similar News