தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - பணி நியமன ஆணை
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.55.50 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். மேலும், அவர் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.25.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் குலசேகரநல்லூர் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், வாலசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகியவற்றை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங் பார்மசி, பொறியியல் படித்தவர்களை தேர்வு செய்தன. மேலும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும் செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், உதவி இயக்குநர் (மா.வே.ம.தொ.வ. மையம்) ம.பேச்சியம்மாள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.