மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திட்ட இயக்குநர் ஆய்வு
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதார திட்ட இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராசா மிராசுதார் மருத்துவமனையினை தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராசா மிராசுதார் மருத்துவமனை ஆகிய இடங்களில் கள ஆய்வு மற்றும் திட்ட செயலாக்கம் குறித்தும், மருத்துவமனையில் அமையப்பட்டுள்ள அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். சி.டி ஸ்கேன் மையம், புதிதாக கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையக் கட்டுமானப் பணிகள், உடல் முழுபரிசோதனை நிலையம், தொற்றுநோய் பிரிவு, ஆய்வகம், மருந்துக் கிடங்கு, அவசர சிகிச்சை பகுதி, கண் சிகிச்சை மையம், சமையலறை, நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடம், நோயாளிகள் அறை போன்ற பல்வேறு வசதிகள் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள், அணுகுமுறைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, 300 படுக்கை வசதிகள் கொண்ட நோயாளிகள் அறை, அவசர சிகிச்சை மையம், போன்ற பல்வேறு வசதிகளின் செயல்பாடுகள் குறித்தும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையின் பயன்பாடு, சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையாக சென்றடைகிறதா எனவும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பகுதி மற்றும் சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையம் நடத்தும் அறுவை சிகிச்சை பயிலரங்கத்தில் மருத்துவர்களுடன் தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், சுகாதாரத் துறை சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆர்.பாலாஜிநாதன், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.திலகம், துணை இயக்குநர்கள் மரு.கலைவாணி (சுகாதாரப் பணிகள்) மரு.மலர்விழி (குடும்பநலம்), மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.ச.இராமசாமி, மாநில திட்ட மேலாளர் மரு.மருது துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடங்கள்) என்.எஸ்.ரவிச்சந்திரன், நிலைய மருத்துவ அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.