ரேஷன் கடை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ரேஷன் கடை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
Update: 2024-03-12 08:48 GMT
மதுரவாயல், தெற்கு மாடவீதியில், வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 1500 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெருமாள் கோயில் தெருவில், கடைக்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து நேற்று ரேஷன் கடையை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிரப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை ரேஷன் கடை முன்பு திரண்டு, கடை ஊழியர்களை சிறை பிடித்து கடை முன்பு அமர்ந்து கடையை மாற்றக்கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடை மாற்றப்படாது. தற்போது உள்ள இடத்தில் தொடர்ந்து செயல்படும் என கடை ஊழியர்கள் எழுதி ஒட்டினர். இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.