நகராட்சி ஊழியர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

காரைக்குடியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நகராட்சி ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2024-01-16 04:39 GMT

நிதியுதவி வழங்கல் 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி பகுதியில் சட்ட விதிகளுக்கு முரணாக, தனிநபர் வீட்டில் நச்சுத் தடை தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்தினரை தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் நேரில் சந்தித்து, சட்ட விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும், நிதியுதவிகளை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில் வழங்கி, ஆறுதல் கூறி, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர்  தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மக்கள், தூய்மைப் பணியாளர்களின் நலனிற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், அவர்களுக்கு தேவையான குடியிருப்பு, குடியிருப்பிற்கான பராமரிப்பு நிதியுதவி, அனைத்து தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி வழங்குதல், மருத்துவ வசதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அவர்களை பயன்பெறச் செய்து வருகிறது. இத்திட்டங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உள்ளாட்சித்துறைகள், தாட்கோ, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட முன்னோடி வங்கி போன்ற துறைகளின் வாயிலாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தினை நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்திடவும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தினை ஓப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படுவதை சரிவர கண்காணித்து உறுதி செய்திடவும், தூய்மைப் பணியாளர்களின் பணிக்குத் தேவையான சீருடைகள், கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை தொடர்ச்சியாகவும், சரிவர வழங்கிடவும், குறிப்பாக பாதுகாப்பான முறையில், உரிய உபகரணங்கள் அணிந்து பணிகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களால் அறிவுறுத்தப்பட வேண்டும்.

அரசின் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளர்கள் பெறுவதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பயன்பெறத்தக்க வகையில், கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்று, கடனுதவிகளை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். National Safai Karamcharis Finance & Development Corporation மூலமாக கடனுதவி வழங்கிட, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தூய்மைப் பணியாளர்கள் மனித கழிவுகளை அகற்றுவதில் ஈடுபடக் கூடாது.

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில், சுத்தம் செய்யும் பணிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரோபோ இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். இவை தொடர்பாக , அரசின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். ரோபோ இயந்திரங்களை மானியத்துடன், 4 சதவீத வட்டியில் National Safai Karamcharis Finance & Development Corporation மூலமாக நகராட்சிகள் பெறுவதற்கும் வழிவகை உள்ளது. இதனை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 விதிகள் 2022-ன் படி வீடுகள், கடைகள், வணி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள நச்சுத் தொட்டியை (SEPTIC TANK) சுத்தம் செய்யும் பணியினை மனிதர்களைக் கொண்டு மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இயந்திரங்கள் மூலம் மட்டுமே பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது கடந்த 07.01.2024 அன்று காரைக்குடி நகராட்சியில் பணியாற்றும் சேவுகப்பெருமாள் என்பவர் , தான் வசிக்கும் அதே பகுதியிலுள்ள தனிநபர் வீட்டிலுள்ள நச்சுத்தடை தொட்டியினை சட்ட விதிகளுக்கு முரணாக எந்த வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டபோது உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மேற்கண்ட தூய்மை பணியாளரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 விதிகள் 2022-ன் படி, நிதியுதவியாக ரூ.15 இலட்சம் நிதியுதவி அன்னாரின் குடும்பத்தினருக்கு காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மேற்கண்டவாறு பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.30 இலட்சம் வழங்கப்படும் என்ற உத்தரவின்படி மீதமுள்ள தொகையும் பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படும். இதுதவிர வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.12.50 இலட்சம் நிதியுதவியும் அரசின் சார்பில் வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினர்களில் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையும் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

Tags:    

Similar News