நடுக்குப்பத்தில் தேர்தல் புறக்கணிப்பு செய்த பொதுமக்கள்

நடுக்குப்பத்தில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்ததால், அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.;

Update: 2024-04-19 15:37 GMT

நடுக்குப்பத்தில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்ததால், அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில். இந்தக் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையே கடந்த ஏழு ஆண்டுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மேற்கொண்டு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க கோயில் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் தடை விதித்தனர். இதன் காரணமாக இக்கோயிலுக்கு ஏழு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு வழக்கம் போல் கோயில் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இல்லையென்றால் இந்த பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன் கருப்புக் கொடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமப்புற மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று காலை நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு அரசு அதிகாரிகள் வாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

ஆனால் இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த தேர்தல் முகவர்கள் கூட உள்ளே செல்லவில்லை. இதுபோல் அப்பகுதி பொதுமக்கள் ஒருவர் கூட வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடி பயணங்களில் அரசு அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திண்டிவனம் சப் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களை வாக்களிக்க உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News