மதுரைக்கு அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை!
சாத்தான்குளத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம், முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி, நெல்லை வழியாக மதுரைக்கு அரசு பஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மதியம் 1மணிக்கு புறப்பட்டு மாலையில் மதுரை சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் இங்குள்ளவர்கள் மதுரை சென்று பிற ஊர்களுக்கு செல்லும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த பஸ் திடீரென எந்த அறிவிப்பும் இன்றி நிறுத்தம் செய்யப்பட்டது.
இதனை போல் மதுரையில் இருந்து இரவு 1மணி அளவில் புறப்பட்டு நெல்லை, சாத்தான்குளம், வழியாக குலசேகரன்பட்டினம் சென்ற அரசு பேருந்தும் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. தற்போது மதுரை பகுதிகளுக்கு செல்ல சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்றுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் போக்குவரத்துதுறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி சாத்தான்குளத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்