ஓவர் லோடு ஓவர் ஸ்பீடு லாரிகளால் - பொதுமக்கள் அவதி !
ஓவர் லோடு லாரிகளால் பொதுமக்கள் அவதியடைக்கின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-05 09:49 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வன்னியந்தாங்கல் கிராமத்தில் மக்கள் குடியிருப்பு வழியாக உட்புறச் சாலையை பயன்படுத்தி இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளால் அப்பகுதி மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகி குண்டும் குழியுமாக மாறிவருகிறது. அதிக பாரம் ஏற்றிக்கொண்டு பிரதான சாலையில் சென்றால் காவல் துறையினரிடம் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக கிராமப்புறச் சாலைகளின் வழியாக இரவு நேரங்களில் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் அவதி. ஆதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அச்சாலையில் வரும் லாரிகளை அனுமதிக்காமல் மடக்கி திருப்பி அனுப்பினாலும் இரவு நேரங்களில் மேலே மோதிவிடுவதைப்போல வேகமாக சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கம் ஆகிய இரு தாலுக்காவில் கல்குவாரிகள் அதிகம் உள்ளன. அந்த குவாரிகளிலிருந்து கற்களையும், எம்சேண்ட் மணலையும் ஓவர் லோடாக எடுத்துச் செல்ல பிரதான போக்குவரத்து சாலையை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். ஏனென்றால் நகரை ஒட்டிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் ரோந்தில் இருக்கும் காவல்துறையினர் கண்ணில் படாமல் இருப்பதற்காக கிராமப்புறத்தின் உட்புற சாலைகளை தேர்ந்தெடுத்து அவ் வழியே சென்று வருகின்றனர். ஆற்காடு சாலையில் பைங்கினர், பாப்பாந்தாங்கல், மாரியநல்லூர், காகணம் ஆகிய பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து பாப்பாந்தாங்கல் கிளியாத்தூர் இணைப்பு சாலை வழியாக சென்று செய்யாறு காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையை அடைந்து அதன் வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, சென்னை போன்ற பகுதிகளுக்கு லாரிகளில் குவாரி பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பாப்பாந்தாங்கல் கிளியாத்தூர் இணைப்பு சாலையில் வன்னியந்தாங்கல் கிராமத்தில் சாலையை ஒட்டி ஆரம்பப் பள்ளி உள்ளது. நெடும்பிறை கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இலகு ரக வாகனங்களே செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ள இருபது அடிக்கும் குறைவான அகலம் கொண்ட இந்த சாலையில் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட கணரக வாகனங்களில் அதிக எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்வதால் இந்தச் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற மிகவும் மோசமான நிலைக்கு மாறிவருகிறது. இது குறித்து இந்தப் பகுதி மக்கள் கூறுகையில் லாரிகள் அதிக எடையுள்ள கற்களை ஏற்றிக்கொண்டு குறிப்பாக இரவு நேரங்களில் அதி வேகமாக செல்வதால் சாலையை ஒட்டியுள்ள வீடுகளில் அதிர்வு ஏற்படுவதால் தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். பகல் முழுவதும் வயலில் உழைத்து கலைத்து இரவில் ஓய்வெடுக்க படுத்தால் லாரிகளின் அட்காசத்தால் தூங்க முடியாமல் தவிக்கிறோம். மேலும் வாகன போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி தார்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான டிப்பர் லாரிகள் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. ரோடு முழுவதும் ஜல்லிக் கற்கள், எம் சாண்ட் துகள்கள் சிதறி விழுகின்றன. இதனால் ரோடு சேதமடைவதுடன் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையில் சிதறிக்கிடக்கும் எம்சாண்ட் மாவு காற்றில் பறந்து வீடுகளில் படிவதுமட்டுமல்லாமல் எம்சாண்ட் துகள்கள் கலந்த காற்றை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு மட்டுமல்லாது வேளாண் கால்நடைகளுக்கும் கூட சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றது. கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலான டிப்பர் லாரிகள் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக இரவில் செல்லும் லாரிகள் அனைத்துமே ஓவர்லோடில், ஓவர் ஸ்பீடில்தான் தான் செல்கிறது. இதனால் அச்சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஓவர் லோடுடன் செல்லும் டிப்பர் லாரிகள் வழி எங்கும் ஜல்லிக் கற்கள் எம் சாண்ட் துகள்களை சிதறவிட்டு செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. அவ்வாறாக செல்லும் லாரிகளை மடக்கி எச்சரிக்கை செய்யலாம் என்று லாரிகளை நிறுத்த முயன்றால் லாரிகளை நிறுத்தாமல் தங்கள் மீது மோதுவதுபோல வேகமாக அருகே வந்து பயமுறித்திவிட்டு வந்தவேகத்திலே சென்றுவிடுகின்றனர். காலை, மாலை வேளையில் பள்ளி மாணவர்கள் அதிகம் செல்லும் இந்தச் சாலையில் அதிக வேகத்துடன் கல்குவாரி லாரிகள் செல்வது மாணவர்களுக்கும் ஆபத்தான சூழல் உள்ளது, இந்தச் சாலையில் கல்குவாரி லாரிகளை அனுமதிப்பதாக இருந்தால் அதற்கேற்றார்போல் எடையை தாங்கக் கூடிய தரமான சாலையாக சாலையை அகலப்படுத்தி அமைக்க வேண்டும். விதிகளுக்கு புறம்பாக அதிக எடை ஏற்றிச் செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். சேதமடைந்த சாலையை உனடடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.