உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி!
புதுக்கோட்டையில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை வனத்துறையின் சார்பில், பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ. சண்முகம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சங்கத் தலைவர் ஜி.எஸ். தனபதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மாலையில் திருவரங்குளம் வேப்பங்குடியிலுள்ள மக்கள் விவசாயப் பண்ணையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சதாசிவம் செய்திருந்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ. சண்முகம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தின உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.
அறந்தாங்கி வனச்சரகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோடியக்கரை சுற்றுலாத் தலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. மேலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வனச்சரக அலுவலர் மணி வெங்கடேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அறந்தாங்கி சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சார்பு நீதிபதி ஏ. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி வி சிவகாமசுந்தரி மற்றும் நீதிபதி வி. சிவகாமசுந்தரி மற்றும் வழக்குரைஞர்கள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.