காற்றில் ஊழல் செய்தவர் ராசா:எடப்பாடி பழனிசாமி

கண்ணில் பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்தவர் ஆ.ராசா என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஊட்டியில் பிரசாரம் செய்தார்.

Update: 2024-04-04 15:40 GMT

பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசாரம் செய்தார்,

அப்போது அவர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தை அதிகமாக நேசித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. நீலகிரி வரும்போது எல்லாம் மலைவாழ் மக்களுடன் ஆடி பாடி அவர்களை மகிழ்விப்பார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்ட மக்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்தார்.

நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் இருந்து அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவோம். அ.தி.மு.க., வை எதிர்த்து போட்டியிடக் கூடிய தி.மு.க., வேட்பாளர் யார் என்று உங்களுக்கு தெரியும். அவருக்கு வாக்களிப்பதால் பிரயோஜனம் இல்லை. அவருக்கு தலைக்கனம் அதிகமாக உள்ளது.

பெரியவர்களை மதிப்ப தில்லை. இந்த நாட்டுக்கு பாடுபட்டவர்களை மதிப்பது கிடையாது. ஆ. ராசா, மத்திய அமைச்சராக இருந்தபோது கண்ணால் பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்தார். விஞ்ஞான முறையில், இந்த நாடு தலைகுனியும் வகையில் ஊழல் செய்த கட்சி தி.மு.க., ரூ.1,72,000 கோடி ஊழலுக்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்தபோதே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்திற்கு வர இருக்கிறது.

அவர் இங்கே இருக்கிறாரா அங்கே இருக்கிறாரா என்பது விரைவில் தெரியும். தி.மு.க., கட்சியை சேர்ந்த ஒவ்வொருவராக சிறைக்கு சென்று கொண்டுள்ளனர். தி.மு.க., ஒரு ஊழல் கட்சி. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க., அரசாகும். அவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள். தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் அதிக அளவில் உள்ளது. தி.மு.க., ஆட்சியினரால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் தி.மு.க., வினர் தான் போதை பொருள் விற்பனை செய்கின்றனர்.

தி.மு.க., அயலக அணி நிர்வாகி பல்லாயிரக்கணக்கான கோடி போதை பொருட்கள் துபாயில் இருந்து கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். இன்னும் பலர் சிறை செல்ல உள்ளனர். ஊர் ஊராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ள ஒருவரும் சிறை செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிந்தபின் சிறைச்செல்வாரா இல்லை அதற்கு முன்னாலே சிறை செல்வாரா என்பது இப்போதுள்ள விவாதம்.

பல்லாயிரக்கணக்கான கோடி போதை பொருள் கடத்திய நபருடன் வெளிநாட்டுகளுக்கு போதை பொருள் கடத்திய நபருடன் தி.மு.க., வினருக்கு என்ன தொடர்பு என்று மக்கள் கேட்கிறார்கள். தி.மு.க., வினர் பிரசார கூட்டத்தில் நலத்திட்டங்கள் குறித்து பேசாமல் என்னைப் பற்றியும் அ.தி.மு.க., பற்றியும் அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு உங்கள் தலைமையில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்கள் ஏதாவது நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதா? நீலகிரி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அ.தி.மு.க., அரசு செய்து தரும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நீலகிரி மாவட்ட மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

மத்தியில் எம்.பி., யாக இருந்து கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு என்ன திட்டங்கள் வாங்கி கொடுத்தீர்கள் என்று தற்போதைய தி.மு.க., வேட்பாளரிடம் நீங்கள் கேட்க வேண்டும். நீலகிரி மக்களுக்கு ஏதாவது அவசர பாதிப்பு ஏற்பட்டால் 80 கிலோமீட்டர் தூரம் உள்ள கோவையில் சென்று மேல் சிகிச்சை பெற வேண்டும்.

இதனால் நீங்கள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப நான் முதலமைச்சராக இருந்தபோது ரூ. 400 கோடியில் நீலகிரியில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தேன். தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைக்கு நிகராக இங்கு சிகிச்சை வழங்கத் தேவையான வசதிகள் உள்ளன. இதன் மூலம் உள்ள ஏழை மக்கள், மலைவாழ் மக்கள் இங்கேயே கட்டணம் இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி இருண்ட ஆட்சி என்று ஸ்டாலின் கூறுகிறார். அவர் கண்ணை மூடி கொண்டதால் அவ்வாறு அவருக்கு தெரிகிறது.

ஊட்டியில் வந்து கண்ணை முழித்து பார்த்தால் இங்குள்ள மருத்துவமனை அவருக்கு தெரியும். நான் பெற்ற பிள்ளைக்கு வேறொருவர் பெயர் வைப்பதுபோல, நான் தொடங்கிய மருத்துவகல்லூரிக்கு ஸ்டாலின் பெயர் வாங்குகிறார் . ஊட்டி, குன்னூர் மார்க்கெட் கடை வாடகையை பல மடங்கு உயர்த்தி விட்டனர்.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி சுற்றுலா பகுதி என்பதால் இங்குள்ள அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றவுடன் மத்திய அரசிடம் வலியுறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி நீலகிரியை இந்தியாவிலேயே மிகச் சிறந்த சுற்றுலா மாவட்டமாக கொண்டு வருவோம். இதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் வருமானத்தை ஏற்படுத்தி கொடுப்போம்.

அதிமுக ஆட்சியில் தொட்டபெட்டா அருகே ரூ.3 கோடி மதிப்பில் தேயிலை பூங்கா அமைக்கப்பட்டது. ஊட்டி ‌ அருகே ரூ.37 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவித்தது அ.தி.மு.க., அரசு. படுகர் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். 45 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, மத்திய அரசிடம் வலியுறுத்தி ஈழுவா தீயா இன மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற்றுத் தரப்பட்டது. கு

டிசை மாற்று வாரியத்தின் மூலம் ஊட்டி கேத்தி, பிரகாசபுரம் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் 172 வீடுகள், அல்லஞ்சி பகுதியில் ரூ.26 கோடியில் 180 வீடுகள் கட்டப்பட்டது. ஊட்டியில் ரூ.14½ கோடியில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்பட்டது. குன்னூர் அருகே ரூ. 95 கோடியில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஊட்டி பஸ் நிலையம் ரூ.2 கோடியில் சீர் செய்யப்பட்டது கோத்தகிரி அருகே ரூ.10.5 கோடியில் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. காட்டேரியில் இருந்து ஊட்டி வரை 3-வது மாற்றுப்பாதை அமைக்க ரூ.100 கோடியில் திட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க.,அரசு. இந்த பணிகளை தி.மு.க., அரசு ஆமை வேகத்தில் செய்து வருகிறது. பாலக்காடு மேட்டுப்பாளையம், அவிநாசி, மற்றும் திருச்சி ரோடு நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. கூடலூர் பகுதியில் ரூ.6.25 கோடியிலும்,

தேவர்சோலை பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்பிலும் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. கூடலூர் பகுதியில் செக்சன்17 பிரச்சினையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின் இணைப்பு பெறாமல் உள்ளது.‌ இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். சிறியூர் -சத்தியமங்கலம் சாலை விரிவாக்க பணிக்கு விரைந்து தீர்வு காணப்படும். முதுமலை புலிகள் காப்பகம் இருப்பதால் கூடலூர் -மைசூர் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தனியார் தோயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாததால் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டேன்டி நிறுவனம் நலிவடைய திமுக அரசு தான் காரணம். 5 ஆயிரம் ஏக்கர் உள்ள இந்த நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க தி.மு.க., அரசு சதி செய்கிறது. இதை அ.தி.மு.க., தடுத்து நிறுத்தும். டேன்டி தேயிலைத் துளை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. இன்று பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்த நிலை மாற வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசிக்கு திமுக அரசு தான் காரணம்.

பொம்மை முதல்-அமைச்சர் நாட்டை ஆளுகிற காரணத்தால், நாட்டு மக்களை விட, வீட்டு மக்களுக்காக பணியாற்றுகிறார். அ.தி.மு.க., அரசு ஆட்சியில் இருந்தபோது விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. பச்சை தேயிலைக்குக்கு மானியம் கொடுத்தது அதிமுக அரசு. அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதும் இந்த மாவட்டத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வாங்கி தருவார். உங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒழிக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தகுதியான வேட்பாளரை அங்கு அனுப்ப வேண்டும்.

தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாடு காப்போம். ஒற்றை விரால் ஓங்கி அடிப்போம். ஒற்றை விரலால் இரட்டை இலைக்கு வாக்களிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.. அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.பி., அர்ஜுனன், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கப்பச்சி வினோத் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News