ஏரி நாணல் தீ வைத்து எரிப்பு: மரக்கன்று பாதிக்கும் அபாயம்
காஞ்சிபுரம்- - அரக்கோணம் விரிவாக்க பணியில் சாலையோரம் வைக்கப்பட்ட புதிய மரக்கன்றுகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Update: 2024-05-12 07:26 GMT
காஞ்சிபுரம் அடுத்த விஷகண்டிகுப்பம் கிராமத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் சிறிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 100 ஏக்கருக்கும் குறைந்த பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், ஆளுயர நாணல் வளர்ந்திருந்தன. தற்போது, கோடைக்கு தண்ணீர் குறைவால், நாணல் உலர்ந்த நிலையில் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மர்ம நபர்கள் ஏரி நாணலுக்கு தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால், ஏரியில் இருக்கும் நாணல் எரிவதோடு, ஊராட்சிக்கு வருவாய் தரும் சீமைக்கருவேல மரங்களும், எரிந்து நாசமாகும் சூழல் உள்ளது.மேலும், காஞ்சிபுரம்- - அரக்கோணம் விரிவாக்க சாலையோரம் வைக்கப்பட்ட புதிய மரக்கன்றுகள் கருகும் அபாயம் உள்ளது. எனவே, கோடைக்காலம் முடிவடையும் தருவாயில், அனைத்து ஊராட்சிகளில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை, ஊராட்சி நிர்வாகங்கள் ஏலம் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.