படப்பையில் நெரிசலை குறைக்க பேருந்து நிறுத்தம் இடமாற்றம்

படப்பை பஜார் வீதியில் நெரிசலை குறைக்க, நேற்று முதல், பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-08 09:14 GMT

தற்காலிக பேருந்து நிலையம் 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் வீதியில் நெரிசலை குறைக்க, நேற்று முதல், பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டலுார்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியரை ஏற்றி செல்ல பேருந்துகள் நின்று செல்வதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், படப்பை பஜார் பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து, மாவட்ட குழு தலைவர் மனோகரன், போக்குவரத்து துறையினர், காவல் துறையினர் படப்பை பஜார் பகுதியில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர்.

நெரிசலை குறைக்க வண்டலுாரில் இருந்து, ஒரகடம் செல்லும் சாலையில், படப்பை பஜார் வீதியில் காமராஜர் சிலை எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தை, 150 மீட்டர் துாரம் உள்ள எஸ்.கே.எஸ்., திருமண மண்டபம் எதிரே தற்காலிகமாக மாற்றி அமைத்தனர். இதையடுத்து, நேற்று முதல், இந்த தற்காலிகபேருந்து நிறுத்தம் பயன்பாட்டிற்கு வந்தது.

படப்பை ஊராட்சி மன்றம் சார்பில் அறிவிப்பு பலகையும், ஒலிப்பெருக்கி வாயிலாக பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்து வருகின்றனர்."

Tags:    

Similar News