அரசியல் போஸ்டர்கள்,சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி தீவிரம்!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுவர்களில் வரையப்பட்டு உள்ள அரசியல் விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Update: 2024-03-19 09:13 GMT
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலையில் அறிவித்தது. முதல்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதனைதொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை முதலே அமலுக்கு வந்தன. அதன்படி பொது வளாகங்கள், கட்டிடங்கள், பஸ் நிறுத்தம், ரெயில் நிலையம், பாலங்கள், மின்கம்பங்கள், உள்ளாட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்துக்குள் அழிக்கப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும். தனியார் வளாகங்கள், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்துக்குள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் வரையப்பட்டு உள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் பொது சுவர்களில் இருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பொது இடங்களில் இருந்த விளம்பர போர்டுகளையும் அகற்றினர். சுவர்களில் வரையப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் வெள்ளைநிற வர்ணம் பூசி அழித்தனர்.