அரசு மருத்துவமனையை புனரமைக்க வேண்டும்: எம்பவர் கோரிக்கை

கன மழை, வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

Update: 2024-01-04 07:59 GMT

கோப்பு படம் 

 எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகள் மேலாண்மை ஆலோசனைக்குழு ஆ. சங்கர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "கன மழை, வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோயாளிகளை பரிசோதிக்கும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கேத்தரிசேசன் லேப் என்ற உபகரணம் முற்றிலுமாக பழுதடைந்துள்ளது.  இதனால் இருதய நோயாளிகள் பரிசோதனைக்காக திருநெல்வேலி மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே உடனடியாக மேற்கண்ட உபகரணத்தை சீரமைக்க உரிய ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். இந்த மருத்துவமனையில் 32 தண்ணீர் உறிஞ்சும் பம்புகள் பழுதடைந்துள்ளன. இதனால் இங்கு தேங்கியுள்ள மழைத்தண்ணீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே புதிய அதிக திறன் உள்ள தண்ணீர் உறிஞ்சும் பம்புகளை வழங்க வேண்டுகிறோம். ஏராளமான கணினிகள், மின் உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற சாதனங்கள் ஆகியவை முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.

ஆகவே கன மழை, வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் புணரமைக்க வேண்டுகிறோம். மேலும் இனி வரும் காலங்களில் கட்டப்பட உள்ள புதிய மருத்துவமனை கட்டிடங்களில் தரைத் தளத்தில் பார்க்கிங் வசதியையும், மேல் தளங்களில் நோயாளிகளுக்கான கட்டிடங்களையும் கட்டிட உரிய ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News