கரும்பை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய கோரிக்கை

நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான செங்கரும்பை, விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக ரூ.40 வீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-01-06 07:51 GMT
செங்கரும்பு

நிகழாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான செங்கரும்பை, விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசே நேரடியாக ரூ.40 வீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கலையொட்டி நிகழாண்டு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் முழு செங்கரும்பு ஒன்று அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான செங்கரும்பை, தமிழக அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து ரூ.40 வீதம் கொள்முதல் செய்யவும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் கூறியது: பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை 2010-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் கடந்தாண்டு ஒரு செங்கரும்பு ரூ.33-க்கு கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்த நிலையில், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து ரூ.14-க்கு மட்டுமே கொள்முதல் செய்தனர். இதனால் செங்கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நிகழாண்டு ஒரு செங்கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயித்திருப்பது தவறு. விலைவாசி உயர்வு, இயற்கை இடர்பாடுகளால் நேரிட்ட பாதிப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒரு செங்கரும்பை ரூ.40-க்கு கொள்முதல் செய்வதுடன், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும். மேலும், ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2,000 வழங்க வேண்டும்.

குறிப்பாக, செங்கரும்பு மற்றும் வெல்லத்தை இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல், அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, அந்தத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்காவிடில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

Tags:    

Similar News