கோவில் இடத்தை மீட்க கோரிக்கை
திருப்பத்தூர் அருகே கோவில் இடத்தை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா மாதவராயன்பட்டி கிராமத்திற்கு சொந்தமான மன்னுனிக்கருப்பர், சிவன், புஷ்பவனேஸ்வரி கோவில் 12 ஏக்கரில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் தனி நபர் ஒருவர், தனியாக வீடு கட்டியும், தென்னங்கன்றையும் நட்டுள்ளார். இதனையடுத்து கோவிலுக்கு பாத்தியப்பட்ட சுமார் ரூபாய் 50,000 மதிப்புள்ள மரங்களை வெட்டி விற்றுள்ளார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருக்களாப்பட்டி பஞ்சாயத்து மூலம் அவரது வீட்டிற்கு மட்டும் தனியாக பேவர் ப்ளாக் சாலை அமைக்க முற்பட்டபோது அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக குத்தகைதாரர் கிராம மக்கள் மீது எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அக்கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.