பேருந்து நிழற்குடையை புதுப்பித்து தருமாறு கோரிக்கை

சின்ன கழனிவாசல் கிராமத்தில் பழுதடைந்த நிலையிலுள்ள பேருந்து நிழற்குடையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-19 13:09 GMT
சேதமடைந்த நிழற்குடை

சின்ன கழனிவாசல் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையை மராமத்து செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொறுப்பாளர் சிவனேசன் மற்றும் கிராம மக்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  "தஞ்சாவூர் மாவட்டம்,  சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி, சின்ன கழனிவாசல் கிராமத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக, நெடுஞ்சாலையில் உள்ள நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த நிழல் குடை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டடம் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அதில் இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

மழை, வெயில் காலங்களில் இந்த நிழல் குடைக்குள் நிற்க பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும், நிழல்குடைக்கும் சாலைக்கும் இடையே வாய்க்கால் உள்ளது. இதில் தண்ணீர் செல்லும் நேரத்தில் பள்ளமாக இருப்பதால் பொதுமக்கள் நிழல் கூடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  எனவே, இதனை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வாய்க்காலுக்கு மேல் பாதை அமைத்து புதிய நிழல் குடை அமைத்து தர வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News