காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வருக்கு கோரிக்கை 

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-05-15 07:24 GMT

கோப்பு படம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செருவாவிடுதி பாலசுப்பிரமணியன் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி மாணவ, மாணவிகள் அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.   கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தி தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அண்மையில் வெளியான +2, +1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்கள் மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விகிதத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அரசு பள்ளி மாணவர்கள் மேலும் பல சாதனைகள் புரிய ஊக்கமாக இருக்கும். மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுவதோடு ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் பாதிக்காமல் இருக்கும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இன்னும் ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்காமல் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் அரசு பள்ளிகளின் தரம் மேம்பட 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்வில் வெற்றிபெற்று காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .

Tags:    

Similar News