உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு கோட்டாட்சியர் மரியாதை
உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வருவாய் கோட்டாட்சியர் மரியாதை செய்தார்.
Update: 2024-05-07 12:56 GMT
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னனி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, ஈரோடு வட்டம், 14, ராஜா தெரு, அசோகபுரம், வீரப்பன்சத்திரம் ஈரோடு என்ற முகவரியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஈரோடு அபிராமி கிட்னிகேர் சென்டரில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அன்னாரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. அன்னாரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அறிவுரையின்படி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் , நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து, மரியாதைசெலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அன்னாரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.