வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்.
Update: 2024-03-05 17:10 GMT
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து இன்று முதல் சேலம் அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் 100-க்கு மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணி தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த காலவரையற்ற போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட முழுவதும் உள்ள 14 தாலுகா அலுவலகங்களிலும், 4 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் பணிகள் முழுவதும் பாதிக்கபட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.