வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 10:48 GMT
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட மையம் சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். பொருளாளர் முருகபூபதி முன்னிலை வகித்தார். இணை செயலாளர் அகிலன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டம் குறித்து மாநில துணை தலைவர் அர்த்தனாரி நிருபர்களிடம் கூறும் போது, ‘வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் வருகிற 22-ந் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டமும், அதைத்தொடர்ந்து 27-ந் தேதி காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்தப்படும்’ என்றார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் அருள்பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திருவேரங்கன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். வருவாய்த்துறையினரின் உண்ணாவிரத போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.