குடிநீர் விநியோகிக்ககோரி காலி குடங்களுடன் சாலை மறியல்
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் குடிநீர் விநியோகிக்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆற்றங்கரை தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் மற்றும் சாலை வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை - சீர்காழி செல்லும் பிரதான சாலையில் சட்டநாதபுரம் பகுதியில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு சென்ற சீர்காழி காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் இன்று மாலைக்குள் குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் மயிலாடுதுறை செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக என்பதால் வேண்டுமென்ற இப்பகுதிக்கு நூறு நாள் திட்டம் முதல் எவ்வித நிதியும் ஒதுக்காமல், இப்பகுதிதை வஞ்சிப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டுகிறார்.