சாலையோர பள்ளம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியில், பாதாள சாக்கடை சீரமைப்புக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியில் அபிராமீஸ்வரர், சங்குபாணி விநாயகர், உலகளந்த பெருமாள் கோவில், திருமண மண்டபம், லாட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. காஞ்சிபுரம் பேருந்து நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்வோர் உலகளந்த பெருமாள் மாட வீதி வழியாகவே சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், அபிராமீஸ்வரர் கோவில் எதிரில், பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்க, இரு மாதங்களுக்கு முன் மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்தும் பள்ளத்தை மூடவில்லை.
இதனால், சாலையோரம் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அப்பகுதிவாசி குமார் என்பவர் கூறியதாவது: சாலையோரம் பள்ளம் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பருவ மழையின்போது பள்ளம் இருப்பது தெரியாமல் முதியவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். மூன்று நாட்களுக்கு முன் டூ - வீலர் ஒன்றும், நேற்று, கார் ஒன்றும் பள்ளத்தில் இறங்கி விட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு காரணமான பள்ளத்தை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்."