ஆன்லைனில் ஆசை காட்டி பொறியியல் பட்டதாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி

Update: 2023-12-09 11:34 GMT
இணையதள மோசடி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சாவூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியிடம், ஆன்லைனில் டாஸ்க்கை முடித்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, 18 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபரை இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை செந்தமிழ் நகரை சேர்ந்த 43 வயது பொறியியல் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்.1 ஆம் தேதி இவருக்கு மர்ம நபரிடமிருந்து, டெலிகிராமில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைன் வாயிலாக, வீட்டிலிருந்தபடி பகுதி நேரமாக, விமான நிறுவனத்திற்கு ரேட்டிங் வழங்கினால், தினமும் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே, அந்த பட்டதாரியும் அத்தகவலில் வந்திருந்த 'லிங்க்' மூலம் உள்ளே நுழைந்து, அதில் குறிப்பிட்டிருந்த பணிகளை மேற்கொண்டார். சில தினங்களில் அவருடைய வங்கி கணக்கிற்கு சில ஆயிரம் ரூபாய் வரவு வந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட சிலர் அவரிடம் இன்னும் சில 'டாஸ்க்' செய்தால் அதிக லாபம் பெற முடியும். அதற்கு முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறினர். உடனே, அந்த பட்டதாரியும் பல தவணைகளாக ரூ.18 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் வாயிலாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தினார். அதன் பின், அவருக்கு எந்த பணமும் வரவில்லை. நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்ற போது, தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பட்டதாரி, தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யில் புகார் அளித்தார். இதன் பேரில் வெள்ளிக்கிழமை ஆய்வாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ரோஸ்லின் வழக்கு பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News