ஏலச்சீட்டு நடத்தி ரூ.29 லட்சம் மோசடி: தம்பதி கைது
கும்பகோணம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தம்பதியை காவல்துறை கைது செய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்கோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில், காரைக்கால் மெயின் சாலையில் வசிப்பவர் சடகோபன்(வயது 48).
இவருடைய மனைவி விஜயா (42). இவர்கள் அந்த பகுதியில் அரிசிக் கடை நடத்தி வருவதுடன் ஏலச்சீட்டும் நடத்தி வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏலச்சீட்டு நடத்திய போது அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர். கும்பகோணம் பாரதி நகர் மேற்கு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாபதியும் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார். வித்யாபதி உள்பட சிலருக்கு ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து ரூ.29 லட்சத்து 29 ஆயிரத்து 30 மோசடி செய்ததாக சடகோபன் மற்றும் அவருடைய மனைவி விஜயா மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் வித்யாபதி புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட காவல் ஆஷிஷ்ராவத்துக்கான உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்கு பதிவு செய்து நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று சடகோபன் மற்றும் அவருடைய மனைவி விஜயா ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தனர்.