தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்படுவதாக சேலம், கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-14 04:36 GMT

தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்படுவதாக சேலம், கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தங்கப்பத்திர சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டுக்கான (2023-24) பணப்பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 9-ந் தேதி வெளியிட்டது. இந்த பரிவர்த்தனையில் 24 காரட் மதிப்பிலான ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.6 ஆயிரத்து 263 ஆகும். இந்த தங்கப்பத்திரம் சேமிப்பு திட்டம் கடந்த 12-ந் தேதி தொடங்கப்பட்டது.

அதன்படி சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள சேலம் தலைமை தபால் அலுவலகம், ஆத்தூர் தலைமை தபால் அலுவலகம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம்மாபேட்டை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், கொண்டலாம்பட்டி, கெங்கவல்லி, பேளூர், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி, தலைவாசல், மல்லூர், ஏற்காடு உள்பட 61 துணை தபால் நிலையங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திரம் மூலம் தனிநபர் ஒருவர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கப்பத்திரம் பெற்று கொள்ளலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்க பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளலாம். 8 ஆண்டுகள் முடிவில் முதிர்வுத்தொகை 24 காரட் தங்கத்திற்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கு முதலீட்டாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பான திட்டமாக நிதி வல்லுனர்களால் கணிக்கப்பட்டு உள்ள தங்க பத்திரம் சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News