வேன், காரில் கடத்திய 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம் அருகே வேன் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர் .

Update: 2024-03-05 04:35 GMT

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று வட்டமுத்தாம்பட்டி அரசு பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 மூட்டைகளில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வேன் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் செவ்வாய்பேட்டை காந்திநகரை சேர்ந்த தினேஷ் (வயது 22), கோனேரிக்கரையை சேர்ந்த விஜயகுமார் (25) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தலில் செந்தில்குமார் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதேபோல், கொங்கணாபுரம் ரவுண்டானா அருகே சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் தலைமையில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை கடத்தி வந்த நாமக்கல் மாவட்டம் கல்யாணி தெற்குகாடு கிராமத்தை சேர்ந்த தேவராஜன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் கொங்கணாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணையில் விற்க கடத்தி சென்றது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தினேஷ், விஜயகுமார், தேவராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News