வழிகாட்டு நெறி முறைகளை வங்கிகள் பின்பற்ற அறிவுறுத்தல்
தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறி முறைகளை வங்கிகள் பின்பற்ற வேண்டும் என வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாவட்டத்தில் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. ஒரு வங்கிக்கணக்கில் கடந்த 2 மாதங்களாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சந்தேகத்துக்கு இடமான வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் வரவு பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்கள் உடன் தெரிவிக்க வேண்டும். ஒரு வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றாலும் அந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். ஏ.டி.எம்-ல் பணம் ரொக்கமாக எடுத்துச்செல்லும் போது உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
வங்கியில் ரூ.1 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை விவரங்கள் தினமும் மாவட்ட தேர்தல் அலுவலக பிரிவிற்கு தவறாமல் அனுப்ப வேண்டும். பின் தேதியிட்ட காசோலைகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கியில் வரவு வைத்தால் அது குறித்து ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை, தேர்தல் அலுவலக பிரிவிற்கும் விவரங்கள் அனுப்ப வேண்டும்.
மேலும், வங்கிகள் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தபால் அலுவலகத்திற்கும் இது தொடர்பான கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிவர்த்தனை நிகழும்பொது அவ்விவரம் குறித்த தகவல்களை வங்கியாளர்களிடமிருந்து பெற மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை வங்கியாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, மாவட்ட முன்னோட்டி வங்கி மேலாளர் இளவரசு உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.