சேலம் மாநகராட்சி 14வது வார்டில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணிகள்
சேலம் மாநகராட்சி 14வது வார்டில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்க உள்ளதாக பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி 14-வது வார்டு ஏ.ஆர்.லைன் மெயின் ரோட்டில் வார்டு அலுவலகம், நவீன கழிப்பிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி பணிக்குழு தலைவரும், வார்டு கவுன்சிலருமான சாந்தமூர்த்தி நேற்று பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- 14-வது வார்டுக்குட்பட்ட முள்ளுவாடி மக்கான் தெரு, குமாரசாமிப்பட்டி மேற்கு தெரு, மாணிக்கம் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் வடிகால், கான்கிரீட் சாலைகள் ஏற்கனவே ரூ.44 லட்சத்தில் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. கோவிந்தன் விரிவாக்க பகுதியில் ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்தில் தார் சாலையும்,
ரூ.22 லட்சத்தில் வெங்கடேசபுரம் முதலியார் தெருவில் மழைநீர் வடிகால், சாலைகளும், வெங்கடேசபுரம் குறுக்கு தெருவில் ரூ.32 லட்சத்து 75 ஆயிரத்தில் மழைநீர் வடிகால், சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
பழனியப்பா நகரில் ரூ.25 லட்சத்து 60 ஆயிரத்தில் தார் சாலை, குமாரசாமிப்பட்டி நகர்ப்புற சமுதாய சுகாதார வளாகத்தில் ரூ.22 லட்சத்தில் ஆய்வக கட்டிடம்,சங்கர் நகர் குறுக்கு தெருக்களில் ரூ.23 லட்சத்து 45 ஆயிரத்தில் தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொங்கும் பூங்கா மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.18 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டது. ராஜா நகர், உடையாப்பட்டி காலனி, நடேச பண்டாரம் காலனி பகுதிகளில் ரூ.35 லட்சத்து 17 ஆயிரத்தில் தார் சாலைகள், இட்டேரி குறுக்கு தெருக்களில் ரூ.51 லட்சத்து 76 ஆயிரத்தில் தார் சாலைகள் அமைந்துள்ளன.
சின்னதிருப்பதி மெயின்ரோடு, வெங்கடேசபுரம் குறுக்கு தெருக்களில் ரூ.64 லட்சத்து 70 ஆயிரத்தில் தார் சாலைகள், மக்கான் தெரு, வெங்கடேசபுரம், குமாரசாமிப்பட்டி பகுதியில் ரூ.27 லட்சத்து 70 ஆயிரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி 14-வது வார்டு பகுதியில் மட்டும் ரூ.4 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
சின்னதிருப்பதி பிரதான சாலையில் ரூ.75 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம், சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அஸ்தம்பட்டி செரிரோடு பிரதான சாலையில் ரூ.3 கோடியே 65 லட்சத்தில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட மொத்தம் ரூ.4 கோடியே 97 லட்சத்து 38 ஆயிரத்தில் வளர்ச்சிப்பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.