உலக கராத்தே போட்டியில் சேலம் மாணவிகள் சாதனை
உலக கராத்தே போட்டியில் சேலம் மாணவிகள் 29 தங்கப்பதக்கங்கள் குவித்து சாதனை ப டைத்துள்ளனர்.
உலக கராத்தே போட்டி மலேசியாவில் நடந்தது. இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வேர்ல்டு சோட்டாகான் கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த சேலம் குளூனி மெட்ரிக் பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, குளூனி வித்யா நிகேதன் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்கள், 24 மாணவிகள் என 27 பேர் கலந்து கொண்டனர். தனிநபர் கட்டா பிரிவில் 27 பதக்கங்களையும், குரூப் கட்டாவில் 24 பதக்கங்கள் என 51 பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் 29 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இந்த சாதனை மாணவிகளை பயிற்சியாளர்கள் விச்சு, மணி, அருண் ஆகியோர் அழைத்து சென்று இருந்தனர்.
சாதனை மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில் பூக்கள் கொடுத்தும் கேக் வெட்டியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சேலம் சந்திப்பு ரெயில் நிலையத்தில் சாதனை மாணவ- மாணவிகளுக்கு கிராண்ட் மாஸ்டர் குப்புராஜ் மற்றும் பெற்றோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக சாதனை மாணவ- மாணவிகள் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சஞ்சய் குமார், டி.ஐ.ஜி. சத்திய பிரியா ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றனர். சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி ஆகியோரையும் சந்தித்து மாணவ- மாணவிகள் வாழ்த்துபெற்றதுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.