குடிபோதையில் தாய்,தந்தையை கட்டையால் அடித்த மகன் கைது
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி குடும்பத்தகராறில் ஈடுபட்ட இளைஞர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொத்தை விற்று தரக்கோரி குடிபோதையில் தாய், தந்தையை கட்டையால் அடித்து துன்புறுத்திய மகனை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கோனேரிப்பட்டி ஊராட்சி காவேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி,பாக்கியம் தம்பதியருக்கு சக்திவேல் (41) என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகனும் உள்ளனர். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி குடும்பத்தகராறில் ஈடுபடுவதோடு மனைவியும் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மது குடிக்க பணம் இல்லாததால் அவரது தாயாரை பணம் கேட்டும் கடனை அடைக்க சொத்தை விற்று கொடுக்கவும் வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டதோடு தாய், தந்தை இருவரையும் கட்டையால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பெற்றோர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தேவூர் போலீசார் சக்திவேலை கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.