சேலம் : சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தாய்க்கு ரூ.6 ஆயிரம் அபராதம்
சேலத்தில் 13 வயது சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தாய்க்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சேலம் சூரமங்கலம் போலீசார் நேற்று சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குரங்குச்சாவடியில் இருந்து மாமாங்கம் செல்லும் வழியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகில் 13 வயது சிறுவன் மொபட்டை ஓட்டிக்கொண்டு வந்தான். இதனை பார்த்த போலீசார் சிறுவனை நிறுத்தி விசாரித்தனர்.
அதில், சிறுவனின் தாயார் அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த விஜயா என்பதும், இவர் தனது மகனிடம் மொபட்டை ஓட்டுவதற்கு அனுமதித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மொபட்டின் உரிமையாளரும், சிறுவனின் தாயாருமான விஜயா மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ அனுமதித்தால் வாகன உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.