சேலம் பெரியார் மேம்பாலத்தில் விபத்து
மொபட் மீது பஸ் ஏறியதால் துப்புரவு தொழிலாளி கால் நசுங்கியது
Update: 2024-02-21 10:44 GMT
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). இவர் சேலம் மாநகராட்சி 47-வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சூரமங்கலத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்காக மொபட்டில் மனைவி மற்றும் உறவினர் குழந்தையுடன் சென்றார். அப்போது அண்ணா பூங்கா அருகில் உள்ள பெரியார் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சுப்பிரமணி மற்றும் மனைவி, குழந்தை ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் அடியில் மொபட் சிக்கியது. இந்த விபத்தில் சுப்பிரமணியின் கால் நசுங்கியது. அவரது மனைவி , குழந்தை அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பஸ் அடியில் சிக்கிய மொபட்டை போலீசார் அகற்றினர். அதற்குள் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போக்குவரத்துறை போலீசார் சரி செய்தனர். இந்த விபத்து குறித்து டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் பெரியார் மேம்பாலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.