காப்புக்காடு நாற்றங்காலில் மரக்கன்றுகள் உற்பத்தி

ஸ்ரீபெரும்புதுார் வனச்சரகம் கட்டுப்பாட்டில், காப்புக்காட்டில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது

Update: 2024-02-15 11:00 GMT

 மரக்கன்றுகள் உற்பத்தி

காஞ்சிபுரம் மாவட்ட பசுமை குழு, மாவட்ட கலெக்டர் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் செயலராகவும் கொண்டு இயங்குகிறது. இந்த குழு மூலம் தொழிற்சாலைகளில் இருந்து நிதி பெற்று, வனத்துறை வாயிலாக மரக்கன்றுகள் உற்பத்தி செய்து தொழிற்சாலை உள்ள பகுதிகள், அரசு துறை அலுவலக வளாகம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் வனச்சரகம் கட்டுப்பாட்டில், சோமங்கலம் அருகே உள்ள நல்லுார் காப்புக்காட்டில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாவல், நீர்மருது, புங்கன், வேம்பு, மகிழம், இலுப்பை, அத்தி, அரசு, ஆலம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடவு செய்து வளர்க்கப்பட்டு வருகின்றன. வனத்துறையினர் கூறியதாவது: காற்றில் கார்பன் அளவை குறைக்க, பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு நிதி வாயிலாக மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2023- - 24ம் ஆண்டில், 55,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 45,000 மரக்கன்றுகளை உற்பத்தி செய்து அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் நடவு செய்துளோம். இதை தொடர்ந்து, பசுமை பகுதியை அதிகரித்து, கார்பன் அளவை குறைக்க ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News