ஒரு கட்டு கொத்துமல்லி ரூ.5 க்கு விற்பனை - விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்துமல்லி ஒரு கட்டு ரூ. 5 முதல் ரூ. 10 வரை மட்டுமே விற்கப்படுவதால் ஒசூரைச் சுற்றி கொத்துமல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஒசூரில் கேரட், பீன்ஸ், முள்ளங்கி, கொத்துமல்லி, புதினா, தக்காளி, கோஸ், கீரை வகைகள் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. யுகாதி, ரம்ஜான் பண்டிகையின் போது காய்கறிகள், கீரைகள் அதிக விலைக்கு விற்கப்படும் என்ற எண்ணத்தில் அதிக அளவு நடவு செய்திருந்த விவசாயிகள், விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் நஷ்டத்தை எதிா் கொண்டுள்ளனா். ஒசூா், ராயக்கோட்டை, சூளகிரி, உத்தனபள்ளி, தளி, அஞ்செட்டி பகுதிகளில் தண்ணீா் பற்றாக்குறை காலத்திலும் சொட்டுநீா்ப் பாசனம் மூலம் கொத்துமல்லி சாகுபடி செய்திருந்த விவசாயிகள், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அறுவடை செய்யாமல் உள்ளனா்
. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: யுகாதி, ரம்ஜான் பண்டிகை நேரத்திலும் கொத்துமல்லி ரூ. 5 முதல் ரூ. 10 வரை மட்டுமே விற்கப்படுவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். நடவு கூலி கூட கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு யுகாதி பண்டிகையின் போது கொத்துமல்லி கட்டு ரூ. 20 முதல் ரூ. 25 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு ஏக்கா் கொத்துமல்லி சாகுபடிக்கு ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தி செலவு கூட கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர் விவசாயிகள்.