சாலையில் செல்லும் கழிவு நீர் - பொதுமக்கள் அவதி

ஊரப்பாக்கம் ஊராட்சி வெங்கடேசபெருமாள் தெரு பகுதியில் சாலை மற்றும் மழைநீர் கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-24 04:53 GMT

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் 

கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சியில், வெங்கடேசபெருமாள் தெருவில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாலை போடப்பட்டது. தற்போது, சாலை சீரழிந்து, மண் சாலையாக மாறி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் வழியாக, சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்வோர், பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, விபத்துகளில் சிக்குகின்றனர்.

தெருவில், மழை நீர் கால்வாய் முறையாக சீரமைக்காததால், சாலையிலேயே கழிவுநீர் செல்கிறது. இதனால், கொசு உற்பத்தியாகி, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இப்பகுதியில், சாலை, சிறுபாலம், மழைநீர் கால்வாய் கட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில், ஊரப்பாக்கம் வெங்கடேச பெருமாள் தெருவாசிகள், நேற்று மனு செலுத்தினர்.

Tags:    

Similar News