ஆயுதப்படை காவலர் உடற்பயிற்சியை எஸ்பி ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-01-07 03:08 GMT
ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி நேற்று காலை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மத்தியபாகம் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். நிகழ்வுகளின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் உடனிருந்தனர்.