பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு யாகம்
பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள பூவரசங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மூல வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப் பட்டது. பின்னர் காலை 8.30 மணியளவில் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், யாக சாலைக்கு எழுந்தருளினார். அதன் பிறகு காலை 10 மணியளவில் சிறப்பு யாகம் ஆரம்பிக்கப்பட்டது. சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், நரசிம்ம யாகம் நடை பெற்று முடிந்ததும் பகல் 12 மணியளவில் வசூத்தாரா ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பகல் 12.30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடைபெற்று மூலவருக்கும், உற்சவருக்கும் கலச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மதியம் 1 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பூவரசங்குப்பம் மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவ லர் ராமலிங்கம், அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச் சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.