விபத்தில் சிக்கி புள்ளிமான் காயம்!
திருமயம் புதுக்கோட்டை புறவழிச்சாலையில் விபத்தில் சிக்கிய மானை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
திருமயம் புதுக்கோட்டை புறவழிச்சாலையில் பாம்பாற்று பாலம் அருகே மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு கால் முறிந்து கிடப்பதாக திருமயம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜ ராஜசோழன் தலைமையிலான மீட்பு படையினர் சென்று காயமடைந்த மானை மீட்டு திருமயம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு புள்ளிமானுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் புள்ளி மானை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனப்பகுதியில் கடும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு விட்டதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி மான்கள் குடியிருப்பு பகுதிக்கு வரும் போது வாகனங்களில் அடிபட்டும், வெறிநாய்கள் கடித்தும் காயமடைந்து வருகின்றன. இதை தவிர்க்க வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.