ஸ்ரீரங்கம்: அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.;

Update: 2024-02-09 07:02 GMT

தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரதநாள்களாகும். இந்த நாள்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். அந்தவகையில் குறிப்பாக, பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகேயுள்ள, அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க, ஆண்டுதோறும் ஆடி ,தை அமாவாசை நாட்களில், ஆயிரக்கணக்கில் மக்கள் வருவது வழக்கம்.

Advertisement

அதன் படி இன்று தை அமாவாசை தினம் என்பதால், அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் செய்ய, பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். மக்கள் அனைவரும் காவிரி ஆற்றில் நீராடி அவர்தம் முன்னோர்க்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி நதி புனித நதி என்பதால் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்விற்கு திருச்சி மாநகர் பகுதி மட்டுமில்லாமல் புற நகர் பகுதியில் இருந்தும் அருகிலுள்ள மாவட்டமான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட, மாநகர நிர்வாகங்கள் சார்பில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயினும் மக்கள் பெருந்திரளாக கூடியதால், மாம்பழச் சாலையிலிருந்து, அம்மா மண்டபம் வழியாக, ஸ்ரீரங்கம் செல்லும் பாதை, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Tags:    

Similar News