கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் இடம் பற்றாக்குறை, எடை குறைவு பிரச்னை.
Update: 2024-04-08 15:29 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்திற்கு, 27,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாரானதை தொடர்ந்து, கடந்த மார்ச் முதல் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன. எனினும், ஆரம்பத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், வியாபாரிகளிடமும், வெளி சந்தையிலும் குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர். இதனால், விரைவாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சில நாட்களுக்கு முன், உத்திரமேரூர் ஒன்றியத்தில், பினாயூர், கரும்பாக்கம், அரும்புலியூர், பழவேரி, திருமுக்கூடல், எடமச்சி ஆனம்பாக்கம், காட்டாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கி செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமாகி உள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் எடுக்காததால், இடம் பற்றாக்குறை மற்றும் எடை குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் எனவும், வானிலை மாற்றம் காரணமாக திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உடனுக்குடன் நெல் மூட்டைகளை ஏற்றுமதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.