ஸ்டெர்லைட் நிலத்தை திரும்பப்பெற வேண்டும்:எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து சிப்காட் நிலத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் வலியுறுத்தினர்.;
எதிர்ப்பு இயக்கத்தினர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், மீனவர் அமைப்பினர், வியாபாரிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் ராஜாஜி பூங்கா முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர்கள் அரி ராகவன், அதிசயகுமார், நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், "ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்கு துணையாக நின்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தன்னெனழுச்சியாக திரண்ட பொதுமக்களே இந்த வெற்றிக்கு காரணம். போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை திரும்ப பெற வேண்டும். தேர்தலின் போது தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்று தெரிவித்தனர்.