மயிலாடுதுறை அருகே வைக்கோல் கட்டு ரூ.20க்கு விற்பனை
மயிலாடுது அருகே செம்பனார்கோயில் பகுதியில் சம்பா அறுவடை முடிந்து வைக்கோல் விற்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நடவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் சம்பா அறுவடை பணியை முடித்துள்ளனர். அறுவடை செய்த நெல்லை ஆன்லைனில் பதிவு செய்து விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வயலில் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்ட பின்னர் அதில் தேங்கும் வைக்கோலும் இயந்திரத்தின் மூலமே நேர்த்தியாக கட்டப்படுகிறது. இந்த வைக்கோல் கட்டுகளை விவசாயிகள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா அறுவடை பணி முடிந்து கடந்த சில வாரங்களாக வைக்கோல் கட்டுகளை விற்பனை செய்து வருகிறோம். பெரும்பாலும் கால்நடை வளர்ப்பவர்கள் மட்டுமே வைக்கோலை வாங்கி செல்கின்றனர்.
சில சமயங்களில் கண்ணாடி, பீங்கான் போன்ற எளிதில் உடையக்கூடிய பொருட்கள் தொடர்பான பணியில் ஈடுபடுவோர் வைக்கோலை வாங்கி செல்வதும் உண்டு. வியாபாரிகள் வயலுக்கு நேரடியாக, வந்து அவர்களது செலவில் இயந்திரத்தின் உதவியுடன் வைக்கோல்கள் கட்டப்பட்டு எடுத்த சென்றால் கட்டுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகும்.
அதுவே விவசாயிகள் எந்திரத்தை பயன்படுத்தி வைக்கோல் கட்டுகளை கட்டி விற்பனை செய்தால் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யலாம். மேலும் தேவைப்படும் இடத்திற்கு வைக்கோல் கட்டுகளை கொண்டு வர சொன்னால் தூரத்திற்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்வோம் என்றனர்.