தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். -
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 01-01-2024 முதல் 15-06-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் குழுவாக இணைந்து 406 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்ட 151 கடைகள் மற்றும் 9 வாகனங்களில் 711 கிலோ 200 கிராம் எடையுள்ள ரூபாய் 1,65,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக 151 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 151 கடைகள் மற்றும் 9 வாகனங்களுக்கும் ரூ.34,60,000 ( ரூபாய் முப்பத்து நான்கு இலட்சத்து அறுபதாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18-06-2024 முதல் 22-06-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 21 குழு ஆய்வுகளில் 14 கடைகள் மற்றும் 1 வாகனத்தில் 18 கிலோ 300 கிராம் எடையுள்ள ரூ.18,300/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 14 கடைகள் சீல் வைக்கப்பட்டன.
14 கடைகள் மற்றும் 1 வாகனத்திற்கு ரூ.4 லட்சம்; அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும். 3வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.