கொட்டையூரில் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கை பேரணி
கும்பகோணம் அருகே கொட்டையூரில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கை பேரணி.
Update: 2024-03-08 09:58 GMT
கும்பகோணம் மாநகராட்சி 01வது வார்டு மேலக்கொட்டையூர் நடுத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்க்க வேண்டி வலியுறுத்தி வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கும் மாணவர் சேர்க்கை பேரணி நேற்று நடைபெற்றது. இப்பேரணியில் மேலத்தெரு, கீழத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட 21 தெருக்கள் அடங்கிய இந்த வார்டில் பள்ளி தலைமையாசிரியர் இருதய தனராஜ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி பழனியம்மாள், துணைத்தலைவி ரேவதி, ஆசிரியைகள் கோமள மகேஸ்வரி, மேரி, வசந்தி, புஷ்பா மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் அபிராமி, பவித்ரா, பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வீடுவீடாக சென்று துண்டுபிரசுரங்கள் வழங்கினர். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம், விலையில்லா பாடநூல்கள், சீருடைகள், பஸ் பயண அட்டை, வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடங்கள், மதிய உணவு திட்டம், சத்தான உணவுகள், முட்டை வழங்கல், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்தல், பொது அறிவுத்திறன் வளர்த்தல், வினாடி வினா, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சலுகைகள் குறித்து பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆசைத்தம்பி, ராஜேஸ்வரி செந்தில், அங்கன்வாடி அமைப்பாளர் ஜெசிமா, உதவியாளர் சரிதா, மழலையர் பள்ளி ஜெயந்தி, மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.