சர்வதேச தடகளப் போட்டிக்கு தேர்வான மாணவி நிதியுதவி வழங்கக் கோரிக்கை
சர்வதேச தடகளப் போட்டிக்கு தேர்வான விவசாயி மகளுக்கு ஆட்சியர், விவசாயிகள் பாராட்டு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Update: 2024-06-29 01:13 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா, வெண்டையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, நவலூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கர் - தனலெட்சுமி தம்பதியினர். ஜெயசங்கர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளைச் செயலாளராக உள்ளார். இவரது மகள் சுவேதா (18),. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாநில அளவிலான ஜூனியர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தங்கம் வென்றார். பிறகு, தேசிய அளவிலான போட்டி ஜம்மு - காஷ்மீரில் இம்மாதம் 11,12,13 ஆம் தேதிகளில் நடந்த போட்டியில் தங்கம் வென்றார். தற்போது, நேபாள நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிக்கு சுவேதா தேர்வாகியுள்ளார். இதையடுத்து வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது, ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாணவி பெற்ற தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பார்த்து பாராட்டினார். மேலும், சர்வதேச அளவிலான போட்டிக்கு செல்லும் சுவேதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, சிறப்பாக விளையாட வேண்டும் என ஊக்கம் அளித்தார். அப்போது அங்கிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ.ஜீவகுமார், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வன், பூதலூர் விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் தமிழரசன், வெண்டையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழி சிவகுமார் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் சுவேதாவை பாராட்டினர். இது குறித்து சுவேதா கூறியதாவது; நான் அரசுப்பள்ளியில் படித்த மாணவி, 6 ஆம் வகுப்பில் இருந்து விளையாட்டு மீதான ஆர்வம் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. எனது தந்தை விவசாயி. இருப்பினும் பெற்றோர் எனது விளையாட்டு ஆர்வத்திற்கு உறுதுணையாக தான் இருந்தனர். சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான நிலையில், ஆட்சியர் எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை போன்ற வீரர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார். நிதியுதவி வழங்க கோரிக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில்," சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி சுவேதா ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை சாதாரண விவசாயி - தாயார் விவசாயக் கூலி தொழிலாளி. இந்நிலையில் மாணவி சுவேதா போட்டியில் பங்கேற்க வெளிநாடு செல்ல பொருளாதார வசதி இல்லாமல் தவித்து வருகிறார். அவருக்கு கருணை உள்ளம் கொண்டவர்களும், அரசும் உதவ வேண்டும்" என்றார். உதவி செய்ய விரும்புவோர் மாணவியின் தந்தை ஜெய்சங்கரை 9994034189, 9943244351 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.