இ - சேவை மையத்தில் வகுப்பறை இடவசதி இல்லாமல் மாணவர்கள் அவதி
கூடுதல் மாணவர்கள் பயில இட வசதி இல்லாததால், அரசு இ - சேவை மையக் கட்டடத்தில் இட நெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 11:29 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சி, நாவலுார் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 265 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பள்ளி, தொடக்கப் பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயில இட வசதி உள்ள இந்த பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டதால், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. இந்த நிலையில், கூடுதல் மாணவர்கள் பயில இட வசதி இல்லாததால், 3, 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ - மாணவியர், பள்ளியின் அருகில் உள்ள அரசு இ- சேவை மையக் கட்டடத்தில் இட நெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற கழிப்பறை வசதியும் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை கேட்டபோது, ''கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்,'' என தெரிவித்தார்.