பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-06 16:06 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் 

பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்காக 13 விடுதிகள் உள்ளன. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 9 விடுதிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 4 விடுதிகளும் இவற்றில் அடங்கும்.

பள்ளிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ-மாணவிகளும் சேரலாம். இந்த விடுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 3 வேளை உணவும் தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி நூல்களும் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பாய்களும், மலைப்பிரதேச மாணவர்களுக்கு கம்பளி மேலாடைகள் உட்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இருப்பிடத்திலிருந்து கல்வி நிறுவனம் 8 கி.மீ. தூரத்தில் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த தூர விதி பொருந்தாது. தகுதியுடைய மாணவர்கள் விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வரும் 14-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே பள்ளி-கல்லூரி மாணவர்கள் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Tags:    

Similar News