கிராம ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம்
கிராம ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம், அறிவுறுத்தல்.
Update: 2024-02-14 09:01 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தெரு விளக்குகள் நல்ல நிலையில் உள்ளதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும் என கிராம ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம், அறிவுறுத்தல். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு திட்டப்பணிகள் ஆய்வு செய்து பேசியபோது அனைத்து கிராம ஊராட்சிகளிலும், பொதுமக்களுக்கு தினந்தோறும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். இன்னும் 3 நாட்களுக்குள் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிட வேண்டும். வீட்டு இணைப்பு குழாய் வழங்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூய்மை காவலர்களால் சேகரம் செய்யப்படும் குப்பைகளை, மேலாண்மை செய்ய ஊராட்சிக்கு தலா இரண்டு ஏக்கர் பரப்பளவு இடங்களை தேர்வு செய்து குப்பைகளை தரம் பிரிக்கும் கொட்டகைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தெருக்களில் நீர் ஆதாரங்கள் இருக்கும் இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகம் மற்றும் பொது சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதோடு மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்திட வேண்டும். எந்தப் பள்ளியிலும் குடிநீர் வசதியோ கழிப்பறைக்கான தண்ணீர் வசதியோ இல்லை என்ற நிலை இருக்க கூடாது. கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் தெரு விளக்குள் 100 சதவீதம் எரிவதை உறுதி செய்வதோடு அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விளக்குகள் எரிவதை ஆய்வு செய்ய வேண்டும். 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்ட உட்கட்டமைப்பு பணிகளை மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நிலுவை பணிகளை பிப்ரவரி 29 ம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீரமலை, மாவட்ட துய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் இராஜபூபதி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.